இன்று முதல் நாள், வருடத்தில் அல்ல —
என் பேனா என் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த முதல் நாள்.
மனம்…
யோசிக்காமல் இருக்க முடியாத குரங்கு மனம், எதையாவது யோசித்துக் கொண்டேயிருக்கிறது.
அங்கே சலனமில்லை.
ஆற்று வெள்ளம் போல தடையில்லாமல் கிடைத்த வழியில் போய்க் கொண்டேயிருக்கிறது.
எழுதுவதற்கும் நினைத்து கொண்டிருப்பதற்கும் உள்ள வித்தியாசம் —
எழுதும் பொழுது எண்ணத்தின், மனதின் வேகம் குறைகிறது.
எழுத்துப் பிழை பற்றியே என் மூளை கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
அமைதியாக யோசிக்கும் பொழுது என் மனதில் தோன்றும் சிந்தனைகள்,
அவற்றை எழுதும் பொழுது தடுமாறுகின்றன.
நான் மட்டுமல்ல, அனைவருக்கும் அதே பயம்.
மனதில் சாக்கடைக் குப்பை போன்ற சிந்தனைகள் இருந்தாலும்,
மனதில் என்ன நினைக்கிறோம் என்று எவருக்கும் தெரிவதில்லை என்ற தைரியம்.
அதனாலேயே அவற்றை எழுதும் பழக்கம் எவரிடமும் இல்லை.
நான் எழுத தொடங்கிவிட்டேன்.
இதுவும் ஒரு தியானம்.
என் தனிமை எனக்கு மட்டுமே சொந்தம்.
அதில் எவருக்கும் இடமில்லை.
பயணத்தில் தனிமை மிகவும் பிடித்தது.
பேருந்துப் பயணத்தில் நூறு பேருக்கு மத்தியில் தனிமையை உணர்ந்தேன்.
சன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு
முகத்தை வருடும் காற்றை ரசிக்கும் பொழுதுகளில்
மனதில் ஏற்படும் விந்தையான சிந்தனைகளில் —
தேவையானவை, தேவையற்றவை, முட்டாள்தனமானவை என
என் மனம் பேருந்தைவிட வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்.
தனிமையில் இருக்கும் பொழுதுதான் நான் நானாயிருக்கிறேன்.
ஒவ்வொரு மனிதருக்கேற்ப நான் முகமூடி அணிந்து நடித்துக்கொண்டிருக்கிறேன்.
அந்த தனிமையை அர்த்தமுள்ளதாக மாற்றியது என் எழுத்து.
அது இப்படியொரு ஆழ்நிலையை எனக்குத் தருமென நான் நினைத்ததேயில்லை.
ஒரு புதிய மனிதனை தேடும் எனக்கு
என் எழுத்து ஒளிவிளக்கு.
இருளில் தொலைந்த என்னை
நான் தேட
எனக்கு கிடைத்த விளக்கு —
எழுத்து.
— இதுவே ஆரம்பம்
Leave a comment